Posts Tagged ‘ஆதிசங்கரர்’

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1