Archive for the ‘கூட்டுக்கலவி’ Category

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

ஜனவரி 17, 2015

மாதொரு பாகன்நாவல்எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

 

One part woman -மாதொருபாகன்

One part woman -மாதொருபாகன் – அர்த்தநாரீஸ்வரர்

2010ல் பதிப்பிக்கப்பட்ட மக்களால் அறியப்படாத நாவல்: “மாதொரு பாகன்” என்ற பெயரில் பெருமாள் முருகன் என்பவரால், ஒரு நவீனம் / நாவல் எழுதப்பட்டு, புத்தகமாக 20010ல் வந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2010, திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, மூன்றாம் பதிப்பு 2012 என்று வெளியிட்டது. அப்பொழுது அதைப் பற்றி எந்த தகவலோ, செய்தியோ, ஒன்றும் கிடையாது. அப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது பற்றி ஊடகங்களில் யாரும் விவரிக்கவோ, விவாதிக்கவோ இல்லை. முற்போக்கு (forward looking, liberal, free) மற்றும் பிற்போக்கு (retrograde, conservative, closed) எழுத்தாளர்கள், முன்னேற்ற (progressive, enlightened, open-minded) மற்றும் பின்னேற்ற (regressive, closed-minded) வகையறாக்கள் படித்து, முன்னவர், பின்னவரை “பாசிஸக்காரர்கள்” (fascist, repressive, oppressive) என்றெல்லாம் ஏசவில்லை. “கவுண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தவில்லை. “கொங்கு தேசிய மக்கள் கட்சி” கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை. யாரும் இந்துத்துவவாதிகள் என்றும் அடையாளம் காணப்படவில்லை, திராவிடத்துவவாதிகள், நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டு வகையறாக்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கவில்லை, ஆர்பாட்டம் நடத்தவில்லை. பிறகு எப்படி பிரச்சினை வந்தது?

 

One part woman -Arthanareswara

One part woman -Arthanareswara

2010, 2011, 2012, 2014களில் இல்லாத பிரச்சினை 2015ல் ஏன் வந்தது?: தமிழில் எழுதப்பட்ட “மாதொரு பாகன்” நாவல் 2010ல் வெளிவந்தது, யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் 2013ல் அநிருத்தன் வாசுதேவன் என்பவரால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப் பட்டு, பெங்குவின் பதிப்பகத்தினரால் “One Part Woman” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் மாதம் 2014 முதல் இப்பிரச்சினை ஆசிரியர் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலமாகத்தான் வெளி வந்தது என்று தெரிகிறது. பேஸ்புக்கில் இதைப் பற்றிய விவாதத்தை சிலர் ஆரம்பித்து வைத்தார்கள். அதனால், அது அப்புத்தகத்தை விளம்பரப் படுத்தும் யுக்தி என்றும் சங்கேகிக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம், ஒரு புத்தகம் அல்லது சினிமா பிரபலமாக்க வேண்டும், நன்றாக வசூல் வரவேண்டும் என்றால், அவர்களே எதிர்மறை பிரச்சாரம் செய்வது வழக்கமாக உள்ளது. சில எழுத்தாளர்களே அதை வெளிப்படையாகக் குறிப்பிடவும் செய்தனர்[1]. ஆனால் இந்து அமைப்பு விளம்பரம் தேடுகிறதா? என்று செய்தி வந்தது[2]. ஆனால், உண்மையைச் சொல்ல ஊடகங்களுக்கு திராணி இல்லை என்றே தெரிந்தது.

 

One part woman -Artha-மாதொரு

One part woman -Artha-மாதொரு

டிசம்பர் 2014ல் ஏற்பட்ட எதிர்ப்புகள், உரையாடல்கள் முதலியன: யுவகிருஷ்ணா என்பவர் டிசம்பர் 29, 2014லேயே, அந்நாவலில் உள்ள சரித்திர ஆதாரமற்ற,  ‘கூட்டுக்கலவி’ போன்ற சித்தரிப்பு உள்ளதை கண்டித்து எழுதியுள்ளர்[3]. “கரிக்குருவி” என்பவர், பெருமாள் முருகனின் வாழ்க்கை பின்னணி, சித்தாந்த தாக்கம் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவரது திரிபுவாதங்களை எடுத்துக் காட்டியுள்ளார்[4]. தனிமனிதரைப் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை என்றாலும், அவரது அப்பின்னணி மப்பாங்கை மனவியல் ரீதியில் எடுத்துக் காட்டுகிறது. ராபர்ட் கால்டுவெல் எப்படி சாணர்களின் மீது தனது வெறுப்பைக் கக்கியுள்ளாரோ, அதே போக்கு இவரது எழுத்துகளிலும் தெரிவதை காணலாம். சாணார்களுக்கு பதிலாக இங்கு தாக்கப்பட்டுள்ளவர்கள் கொங்குசாதியினர். கரிக்குருவி மேலும் அவர் எப்படி சித்தாந்தரீதியில் செயல் பட்டார், நிதியுதவி பெற்றார் முதலியவற்றையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்[5]. பிறகு பேராசிரியர். அ.மார்க்ஸ், எழுத்தாளர். வ.கீதா, பேராசிரியர். வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன், எழுத்தாளர். பாரவி, தோழர். விடுதலை ராஜேந்திரன், ஓவியர். மருது, பேராசிரியர். லட்சுமணன், எழுத்தாளர். வெளி ரங்கராஜன், எழுத்தாளர். சுப குணராஜன், இயக்குநர். அம்ஷன் குமார், இயக்குநர். RP அமுதன் முதலியோர் டிசம்பர் 31 2014 மாலை. 4.30 மணி முதல் மாலை 7 மணி வரை அன்று பனுவல், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41 இப்பிரச்சினைப் பற்றி பேசியுள்ளதாக தெரிகிறது[6]. இவர்கள் எல்லோருமே இடதுசாரி, திராவிட, நாத்திக, கிருத்துவ-முஸ்லிம் ஆதரவுவாதிகள் என்று தெரிகிறது. இணைதளத்தில் சில கருத்து பரிமாற்றங்களும் உள்ளன[7]. எப்படியோ இத்தகைய செயல்களால், இவருக்கு உலக அளவில் செய்திகள் வெளியிடப் பட்டதால், நல்ல விளம்பரமும் கிடைத்துள்ளது[8].

 

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually – அதிமுற்போக்கு எழுத்தாளரான இவரது புத்தகமும் 2014ல் எதிர்க்கப்பட்டுள்ளது!

புத்தகத்தில் உள்ள சில விவரங்கள்: சில பக்கங்களில் உள்ளதை பார்ப்போம். அப்புத்தகத்தில் குழந்தை இல்லாத பெண் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், ஒரு ஆணை தேர்ந்தெடுத்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ளது[9]. யார் யாரை வேண்டுமானாலும்……என்ற ரீதயில் அருவருக்கத்தக்க-கொச்சையான வார்த்தைகள்[10],  தேர்த்திருவிழாவை மிகக்கேவலமாக வர்ணித்தல்[11], 14ம் நாள் யார் யாரை வேண்டுமானாலும்……என்ற…தொடர்கிறது, “வெள்ளப்பாட்டி எப்படி இருக்கிறா பாரு.அவுங்கம்மாவுக்கு அவ அப்பிடிப் பொறந்தா தெரியுமா? பதினாலாத் திருநா தந்த சாமி பிள்ள அவ, பையன் வேணும்ன்னு ரண்டாத் தடவையும் அவுங்கம்மா அங்கதான் போனா. அப்படியே பையன் பொறந்தது. எத்தனையோ வருசமா நடந்துகிட்டு வர்ற வழமதான்….” என்று இப்படியும் உள்ளது[12]. “நீ அந்தகாலத்து ஆனாட்டமே பேசறீடா, ஒரு பும்பள சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டா சாதியோட போனா அவ்வளவு தான். ஊர விட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிடுவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடுதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்ததுல பாதிக்குமேல தீண்டாச்சாதித் தண்டுப்பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ”, போன்றவை[13]. இவையெல்லாம் எத்தகைய அளவுகோலை வைத்து நாகரிகமானது என்பதனை ஆதரிப்பவர்கள் விளக்கவில்லை. இத்தகைய கொச்சையான, ஆபாசமான, அசிங்கமான எழுத்துக்களைக் கொண்டுள்ள இவர்கள் எப்படி “எழுத்தாளர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இவர்களால், தமிழ் என்னாகும் என்றும் புரியவில்லை.

 

Tiruchengode Ratha festival - depicted differently

Tiruchengode Ratha festival – depicted differently

ஊர்மக்களின் உணர்வுகளை மதிக்காத, இரட்டடிப்பு செய்துள்ள ஊடகங்கள்: நாவல் என்றால் கற்பனையாக எதையாவது எழுதலாம், ஆனால், குறிப்பாக திருச்செங்கோடு மக்கள் அவ்வாறுதான் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்பது போல அருவருக்கத்தக்கக் கொச்சையான வசனங்கள் கொண்டு எழுதியது ஆபாசமாக இருக்கிறது. இதனால், உள்ளூர் மக்கள் கோபம் கொண்டதில் வியப்பில்லை. அதனால்தான், “எங்கள் ஊர் மக்களின் மனநிலையை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் எழுத்தாளர்களை மதிப்பவர்கள். பெருமாள்முருகனின் அனைத்துப் புத்தகங்களையும் எதிர்க்கவில்லை. ‘மாதொருபாகன்நாவலில் கோயில் திருவிழா பற்றியும், தேர்த் திருவிழா பற்றியும் அவரது தவறான கண்ணோட்டத்தையும் மாற்றக் கோரிதான் எங்கள் போராட்டம் நடைபெற்றது. எங்களின் கோரிக்கை வெளிப்படையானது. மொத்தம் 44 அமைப்புகள் சேர்ந்தே இந்தப் போராட்டத்தைச் செய்கின்றன. காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களிலும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆக, வெளிப்படையாகவே நாங்கள் செயல்படுகிறோம் .– ‘திருச்செங்கோடு மானம் காப்போம்அமைப்பு”, என்று அறிவித்துள்ளனர்[14]. நடுநிலையோடு நியாமாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால், பெருமளவில், அவ்வூர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், கருத்து சுதந்திரம் போர்வையில் உண்மை விவரங்களை மறைத்துள்ளது. இதற்கு ஆசிரிய கொடுத்த விளக்கம் இவ்வாறுள்ளது.

 

நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது (தினமலர்)[15]: கடந்த, 1940களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், ‘மாதொரு பாகன்!’ குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது தான் இந்நூல். தற்போது, நாடு முழுவதும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி இல்லாத சூழலில், குழந்தை பேற்றுக்காக பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர். அதுபோன்ற சமூக வழக்கத்தை தான், பல்வேறு ஆதாரங்களுடன், கற்பனை கதாபாத்திரங்கள் மூலம், நூலில் விவரித்துள்ளேன். இதற்காக, கற்பனையாக ஒரு ஊரையும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறேன். குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணை, ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு, அவ்வூர் மக்கள் அனுப்புகின்றனர். அந்த திருவிழாவில், தனக்கு பிடித்த ஒரு ஆடவனை தேர்ந்தெடுத்து, அந்த பெண் குழந்தைப் பேறு பெறுகிறாள். இது தான், ‘மாதொரு பாகன்’ கதை. இப்படி பிள்ளைப் பேறு பெற வேண்டும் என்பதற்காக, நாயகியை உறவுக்காரர்கள் திருவிழாவிற்கு அனுப்ப முடிவெடுக்க, நாயகன் மறுக்கிறான். இருந்தும் நாயகி, வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு பிள்ளை பேறு நிலையை எட்டுகிறார். இது பிடிக்காததால், நாயகன் தற்கொலைக்கு முயல்கிறான். ‘பாண்டவர்கள், திருதிராஷ்டிரன் ஆகியோர் பிறந்ததும், இந்த முறையில் தான்’ என, மகாபாரதம் சொல்கிறது[16]. இதையெல்லாம் வைத்துத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. கதையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சான்று உள்ளதோடு, நாட்டார் வழக்கு ஆவணங்களும் உள்ளன[17]. பத்து ஆண்டுகளுக்கு முன், முக்தா சீனிவாசனின், ‘அவன் அவள் அது’ படமும், பாலச்சந்தரின், ‘கல்கி’ படமும் கூட, வாடகைத் தாயின் கதையை சித்தரிப்பவை தான்[18]. எந்த இடத்திலும், சமூகம் பயன்படுத்திய வழக்கத்தை, நியாயம் என்றோ தவறென்றோ, நான் சொல்லவில்லை. ஆனால், நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை தடை செய்யக் கோருவதும், என்னை கைது செய்ய வேண்டும் எனச் சொல்வதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை அல்ல. கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலாம்; இல்லை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டு, போராட்டம் நடத்துவதும், நூலை எரிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை”, என்று வாதிட்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

16-01-2015

[1] மனுஸ்யபுத்திரன், “….நாளைக்கு விளம்பரத்திற்காகவும் சில பதிப்பாளர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது” – தினமலர், 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[2] தினமலர், நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?, 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[3] http://www.luckylookonline.com/2014_12_01_archive.html

[4] http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

[5] http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

[6] http://thiru2050.blogspot.in/2014/12/blog-post_62.html

[7] http://www.jeyamohan.in/69124

[8] http://www.huffingtonpost.in/2015/01/13/perumal-murugan_n_6461194.html

[9] அத்தியாயம்,14, ப.87.

[10] அத்தியாயம்.20, ப.116-117.

[11] பக்கங்கள்.84-85.

[12] பக்கம்.115.

[13] பக்கம்.118.

[14]http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6780445.ece

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=1152801

[16] ஆனால், அங்கு எந்த சாதியைப் பற்றியும் பேசப்படவில்லை, கொச்சையான வார்த்த பிரயோகமும் இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடே தவறானதாகும்.

[17] பிறகு இல்லை என்பதை கவனிக்கவும். சரித்திரரீதியில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்.

[18] இந்த உதாரணங்களுக்கும், இக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடும் தவறானதாகும், திசைத்திருப்புவதாகும்..